Friday, March 31, 2017

இரு கோடுகள்


முழுவதுமாய் முழிப்பதற்குமுன் கைப்பேசி சிணுங்கியது. எழுந்து எடுப்பதற்குள் , யாராயிருக்கும் என்று ஒரு பத்து யூகங்கள்.
அதில் ஒன்றிரண்டு வயிற்றைக் கலக்கும் வகையைச் சார்ந்தவை.

அவள் வீட்டில் வேலை செய்யும் சுலோ என்ற சுலோச்சனா சுப்ரபாதம் பாடி
"மாமியாருக்கு உடம்பு சரியில்லேன்னு ,ராவைக்கே பஸ்லே செஞ்சிக்கு வந்திட்டோம்க்கா. எப்போ வருவேன்னு தெரியலேக்கா " என்று கைபேசி மூலம் ஒரு அணுகுண்டை சர்வசாதாரணமாக வீசியதிலிருந்து ஒரே பதற்றம் நந்திதாவிற்கு.

கழிவிரக்கமும் , சுயபச்சாதாபமும் ஓங்க , ஐந்து கடல்,ஆறு மலை ,ஏழு கொள்ளி வாய்ப்பிசாசுகளைக் கடக்கவேண்டிய மன நிலையுடன் பாத்திரங்களைத் தேய்த்தாள் நந்திதா.

"ஐயோ , இனிமேல் யாரைப்போய் தேடுவேன்.காலை ஏழு மணிக்கே வரணும், கை ,வாய் மற்றும் வேலை சுத்தமாக இருக்கவேண்டும்.லீவு போட்டால் முன்னரே சொல்லும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் எனக்கு வரும் கனவுகளைப் பொறுமையாக ( சிரிக்காமல் ) கேட்க வேண்டும்.

சுலோ மாதிரி கிடைப்பது கஷ்டம்" என்றாள் சோகமாய் நந்திதா .

இத்தனை கல்யாண குணங்களைக் கொண்டவளா நம் சுலோ, என்றால் அதுதான் இல்லை.

பேருக்கு ஏற்றார் போல் தான் வேலையும் . ஆனால் உற்ற தோழி.வீட்டு வேலை பளுவை வெகுவாகக் குறைக்க , நந்திதாவிற்கு கிடைத்த வரன்.

அவள் இன்றி ( உடம்பில்) ஓர் அணுவும் அசையாது.

முதலில் பிடிக்காமல் ..பின்னர் பழகிப்போய் ..இப்போது அவள் வரவில்லை என்றால் வாழ்வே அஸ்தமித்ததைப் போல் உணரும் சராசரி மனுஷி நந்திதா .


"டேய் , கார்த்திக் , இன்னிக்கி 'சுலோ பாய்சன்' டா நமக்கு.திட்டு வாங்காம ஸ்கூல் போகணும்னா சீக்கிரம் எழுந்து கிளம்பிடு " என்று நந்திதா காதுக்கு எட்டாமல் விஷயத்தை ரகசிய பரிபாஷையில் மகனிடம் சொன்னான் முரளி. நந்திதாவின் டென்ஷன் அவ்வளவு பேர் போனது அந்த வீட்டில்!

பாத்திரம் மட்டும் தேய்த்து பாக்கி வேலைகளை அப்படியே விட்டு விட்டு லன்ச் டப்பாக்களைக் கட்டினாள் நந்திதா.

பரபரப்பு குறையாமல் கிளம்பி ஆபீஸ் வேனில் ஏறிய பின் அம்மா, தங்கை,அக்காவிற்கு போன் மூலமாகவும்,ஸ்கூல் பிரண்ட்ஸ் , ஆபீஸ் பிரண்ட்ஸ் மற்றும் இன்ன பிற குரூப்களுக்கு வாட்சப் மூலமாகவும் சுலோ நின்று விட்ட சங்கடத்தைப் பற்றி புலம்பித் தீர்த்தாள்.

பேஸ்புக்கை மட்டும் ஏன் விடுவானேன் என்று அதிலும் அலங்காரமாய்
மிகைப்படுத்தப்பட்ட ஒரு புலம்பலை வைத்தாள்.

ஆபிஸ் வந்து விட்டது ..இன்னும் தீரவில்லை சுலோ வராத துக்கம்,நந்திதாவிற்கு. யார் மாட்டப்போகிறார்களோ !

ஆபிஸில் ஒரே பரபரப்பு. எல்லோரும் ஒருவித சோகத்துடன் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர் .

ரமாவின் தந்தை இறந்துவிட்டாராம். எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.

நந்திதாவிற்கு சுரத்தே இல்லை. தன் அப்பாவை பற்றி உடனே கவலை தொற்றிக்கொண்டது . ரமாவின் அம்மாவின் நிலைமையும் கண் கலங்க வைத்தது.

எப்படியோ நாளை கழித்து, 6 மணி அளவில் வீட்டிற்கு வந்து விட்டாள். விளக்கு கூடப் போடாமல் அன்றைய நிகழ்வுகளை இருட்டில் சோபாவில் உட்கார்ந்து அசைபோட்டாள்.

வீட்டு வேலை செய்பவள் வரவில்லை என்ற அற்ப விஷயத்திற்கு, தான் அளவுக்கு மீறி அங்கலாய்த்தது தன் மீதே வெறுப்பையும் , கோபத்தையும் வரவழைத்தது.

ரமாவின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு முன் இது சில்லறைத்தனமாகத் தெரிந்தது.

"அம்மா பசிக்குது " என்று டென்னிஸ் ராக்கெட்டை சோபாவில் போட்டபடியே வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்தாள்.

அதற்குள் முரளியும் வர , "எல்லோரும் சாப்பிட வெளியே போலாம் " என்றான், சுலோ வராத டென்ஷனில் நந்திதா இருப்பாள் என்று யூகித்து.

"இல்லை நானே ஏதாவது சட்டுன்னு பண்ணி கொடுக்கறேன் " என்று சொன்னவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் கார்த்திக்கும், முரளியும்.

உதட்டைப் பிதுக்கி, தோளை உயர்த்தி உள்ளே சென்றான் கார்த்திக். முரளி நந்திதாவுடன் சமயலறைக்குள் நுழைந்து என்னவென்று கேட்டான் ..

சொல்லிமுடித்த நந்திதாவிடம், "ஹ்ம். எந்த வயதிலும் பெற்றோரின் இழப்பு தாங்கவே முடியாத சோகம் தான். ரமாவின் அப்பா வயசானவர். பேரன் பேத்தி எல்லாம் பார்த்து விட்டார். அவள் அம்மாவிற்கு கஷ்டம்தான். ராமாவிற்குமே கூட கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் நினைத்துப் பார் ..கார்த்திக் பிரண்டோட அப்பா போன வாரம் மாரடைப்பால் திடீரென்று 47 வயதில் இறந்து போனாரே..? இரண்டு பிள்ளைகள்,மனைவி , தாய் எல்லோரையும் கதற விட்டு ..அந்த கொடுமைக்கு என்ன சொல்வது" என்றான்..

"ஆமாம் முரளி ..இரு கோடுகள் ப்ரின்சிபிள் தான்.

தனியாய் பார்த்தால் தான் சுலோ வராத சின்ன ,அல்ப கஷ்டம் கூட பூதாகாரமாய் தெரிகிறது ". .என்றாள் நந்திதா புதிய தெளிவுடன்.

"அதே மாதிரி மத்தவங்க சந்தோஷத்தைப் பார்த்து லேசா பொறாமையும் ,புகைச்சலும் வரா மாதிரி இருந்தா கூட, உடனே நமது கோட்டை பெரிசா இழுத்து நம்மை விட கீழே இருப்பவங்க கோட்டை சின்னதா போட்டுத்  தேத்திக்கனும்." என்றான் முரளி.


"டின்னர் ரெடியா ? " என்று வெளியே வந்த கார்த்திக்கிடம் , " மாத்ஸ் மார்க் வந்ததா, எவ்வளோ ?" என்றான் முரளி .

65% என்ற கார்த்திக்கிடம், " ஏண்டா ? நல்ல மார்க் இல்லியே " என்றான் முரளி ..

"பேப்பர் கஷ்டமா இருந்தது...அதே இரு கோடுகள் லாஜிக் தான் பா ..என்னோட நிறைய பேர் கம்மி மார்க். " என்றானே பார்க்கலாம்!


No comments: