Friday, March 31, 2017

இரு கோடுகள்


முழுவதுமாய் முழிப்பதற்குமுன் கைப்பேசி சிணுங்கியது. எழுந்து எடுப்பதற்குள் , யாராயிருக்கும் என்று ஒரு பத்து யூகங்கள்.
அதில் ஒன்றிரண்டு வயிற்றைக் கலக்கும் வகையைச் சார்ந்தவை.

அவள் வீட்டில் வேலை செய்யும் சுலோ என்ற சுலோச்சனா சுப்ரபாதம் பாடி
"மாமியாருக்கு உடம்பு சரியில்லேன்னு ,ராவைக்கே பஸ்லே செஞ்சிக்கு வந்திட்டோம்க்கா. எப்போ வருவேன்னு தெரியலேக்கா " என்று கைபேசி மூலம் ஒரு அணுகுண்டை சர்வசாதாரணமாக வீசியதிலிருந்து ஒரே பதற்றம் நந்திதாவிற்கு.

கழிவிரக்கமும் , சுயபச்சாதாபமும் ஓங்க , ஐந்து கடல்,ஆறு மலை ,ஏழு கொள்ளி வாய்ப்பிசாசுகளைக் கடக்கவேண்டிய மன நிலையுடன் பாத்திரங்களைத் தேய்த்தாள் நந்திதா.

"ஐயோ , இனிமேல் யாரைப்போய் தேடுவேன்.காலை ஏழு மணிக்கே வரணும், கை ,வாய் மற்றும் வேலை சுத்தமாக இருக்கவேண்டும்.லீவு போட்டால் முன்னரே சொல்லும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் எனக்கு வரும் கனவுகளைப் பொறுமையாக ( சிரிக்காமல் ) கேட்க வேண்டும்.

சுலோ மாதிரி கிடைப்பது கஷ்டம்" என்றாள் சோகமாய் நந்திதா .

இத்தனை கல்யாண குணங்களைக் கொண்டவளா நம் சுலோ, என்றால் அதுதான் இல்லை.

பேருக்கு ஏற்றார் போல் தான் வேலையும் . ஆனால் உற்ற தோழி.வீட்டு வேலை பளுவை வெகுவாகக் குறைக்க , நந்திதாவிற்கு கிடைத்த வரன்.

அவள் இன்றி ( உடம்பில்) ஓர் அணுவும் அசையாது.

முதலில் பிடிக்காமல் ..பின்னர் பழகிப்போய் ..இப்போது அவள் வரவில்லை என்றால் வாழ்வே அஸ்தமித்ததைப் போல் உணரும் சராசரி மனுஷி நந்திதா .


"டேய் , கார்த்திக் , இன்னிக்கி 'சுலோ பாய்சன்' டா நமக்கு.திட்டு வாங்காம ஸ்கூல் போகணும்னா சீக்கிரம் எழுந்து கிளம்பிடு " என்று நந்திதா காதுக்கு எட்டாமல் விஷயத்தை ரகசிய பரிபாஷையில் மகனிடம் சொன்னான் முரளி. நந்திதாவின் டென்ஷன் அவ்வளவு பேர் போனது அந்த வீட்டில்!

பாத்திரம் மட்டும் தேய்த்து பாக்கி வேலைகளை அப்படியே விட்டு விட்டு லன்ச் டப்பாக்களைக் கட்டினாள் நந்திதா.

பரபரப்பு குறையாமல் கிளம்பி ஆபீஸ் வேனில் ஏறிய பின் அம்மா, தங்கை,அக்காவிற்கு போன் மூலமாகவும்,ஸ்கூல் பிரண்ட்ஸ் , ஆபீஸ் பிரண்ட்ஸ் மற்றும் இன்ன பிற குரூப்களுக்கு வாட்சப் மூலமாகவும் சுலோ நின்று விட்ட சங்கடத்தைப் பற்றி புலம்பித் தீர்த்தாள்.

பேஸ்புக்கை மட்டும் ஏன் விடுவானேன் என்று அதிலும் அலங்காரமாய்
மிகைப்படுத்தப்பட்ட ஒரு புலம்பலை வைத்தாள்.

ஆபிஸ் வந்து விட்டது ..இன்னும் தீரவில்லை சுலோ வராத துக்கம்,நந்திதாவிற்கு. யார் மாட்டப்போகிறார்களோ !

ஆபிஸில் ஒரே பரபரப்பு. எல்லோரும் ஒருவித சோகத்துடன் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர் .

ரமாவின் தந்தை இறந்துவிட்டாராம். எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.

நந்திதாவிற்கு சுரத்தே இல்லை. தன் அப்பாவை பற்றி உடனே கவலை தொற்றிக்கொண்டது . ரமாவின் அம்மாவின் நிலைமையும் கண் கலங்க வைத்தது.

எப்படியோ நாளை கழித்து, 6 மணி அளவில் வீட்டிற்கு வந்து விட்டாள். விளக்கு கூடப் போடாமல் அன்றைய நிகழ்வுகளை இருட்டில் சோபாவில் உட்கார்ந்து அசைபோட்டாள்.

வீட்டு வேலை செய்பவள் வரவில்லை என்ற அற்ப விஷயத்திற்கு, தான் அளவுக்கு மீறி அங்கலாய்த்தது தன் மீதே வெறுப்பையும் , கோபத்தையும் வரவழைத்தது.

ரமாவின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு முன் இது சில்லறைத்தனமாகத் தெரிந்தது.

"அம்மா பசிக்குது " என்று டென்னிஸ் ராக்கெட்டை சோபாவில் போட்டபடியே வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்தாள்.

அதற்குள் முரளியும் வர , "எல்லோரும் சாப்பிட வெளியே போலாம் " என்றான், சுலோ வராத டென்ஷனில் நந்திதா இருப்பாள் என்று யூகித்து.

"இல்லை நானே ஏதாவது சட்டுன்னு பண்ணி கொடுக்கறேன் " என்று சொன்னவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் கார்த்திக்கும், முரளியும்.

உதட்டைப் பிதுக்கி, தோளை உயர்த்தி உள்ளே சென்றான் கார்த்திக். முரளி நந்திதாவுடன் சமயலறைக்குள் நுழைந்து என்னவென்று கேட்டான் ..

சொல்லிமுடித்த நந்திதாவிடம், "ஹ்ம். எந்த வயதிலும் பெற்றோரின் இழப்பு தாங்கவே முடியாத சோகம் தான். ரமாவின் அப்பா வயசானவர். பேரன் பேத்தி எல்லாம் பார்த்து விட்டார். அவள் அம்மாவிற்கு கஷ்டம்தான். ராமாவிற்குமே கூட கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் நினைத்துப் பார் ..கார்த்திக் பிரண்டோட அப்பா போன வாரம் மாரடைப்பால் திடீரென்று 47 வயதில் இறந்து போனாரே..? இரண்டு பிள்ளைகள்,மனைவி , தாய் எல்லோரையும் கதற விட்டு ..அந்த கொடுமைக்கு என்ன சொல்வது" என்றான்..

"ஆமாம் முரளி ..இரு கோடுகள் ப்ரின்சிபிள் தான்.

தனியாய் பார்த்தால் தான் சுலோ வராத சின்ன ,அல்ப கஷ்டம் கூட பூதாகாரமாய் தெரிகிறது ". .என்றாள் நந்திதா புதிய தெளிவுடன்.

"அதே மாதிரி மத்தவங்க சந்தோஷத்தைப் பார்த்து லேசா பொறாமையும் ,புகைச்சலும் வரா மாதிரி இருந்தா கூட, உடனே நமது கோட்டை பெரிசா இழுத்து நம்மை விட கீழே இருப்பவங்க கோட்டை சின்னதா போட்டுத்  தேத்திக்கனும்." என்றான் முரளி.


"டின்னர் ரெடியா ? " என்று வெளியே வந்த கார்த்திக்கிடம் , " மாத்ஸ் மார்க் வந்ததா, எவ்வளோ ?" என்றான் முரளி .

65% என்ற கார்த்திக்கிடம், " ஏண்டா ? நல்ல மார்க் இல்லியே " என்றான் முரளி ..

"பேப்பர் கஷ்டமா இருந்தது...அதே இரு கோடுகள் லாஜிக் தான் பா ..என்னோட நிறைய பேர் கம்மி மார்க். " என்றானே பார்க்கலாம்!


Saturday, March 25, 2017

காலப்பிழை


"ப்ரியா, ரெடியா, எவ்வளவு நேரமா கிளம்புவே ?"

" உன்னாலதான் லேட் மா . ஒழுங்கா ஜீன்ஸ் அண்ட் டி ஷர்ட் போட விடாமே பாவாடை தாவணி போடுன்னு  சொல்ற. சரியான அவஸ்தை பிடிச்ச  டிரஸ். தாவணியிலே ஸ்டிட்ச்சே கிடையாது. பிளவுசிலே  ஏகப்பட்ட ஸ்டிட்ச்செஸ். "

"என்னிக்கோ ஒரு நாள் தானே? பாட்டி வில் பி ஸோ ஹாப்பி" 

ஒரு வழியாய் ரத்னாவும் ப்ரியாவும் ,ரத்னாவின் அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்து சேர்ந்தனர் .

"ஹாய் பாட்டி " என்ற ப்ரியா ஆச்சர்யத்துடன் தன்னையே பார்த்த பாட்டியிடம்.. "பாட்டி ப்ளீஸ் , ப்ரில் போட்டு தேச்சுவெச்ச  குத்து விளக்கு மாதிரி இருக்கே அப்படின்னு கெக்கே பிக்கேன்னு  சொல்லாதே . ஒரே அவஸ்தை இந்த தாவணி " என்று உரிமையோடு பொய்யாக கோபித்துக்கொண்டாள் .

ரத்னாவை பார்த்து பரிமளம் , "அவள்  இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க  விடேன்." என்றாளே பார்க்கலாம்.!  

ரத்னா தன் அம்மாவை முறைத்துக்கொண்டே ,"என்னம்மா இப்படி கவுத்துட்டே என்னை. இந்த சுதந்திரம் எனக்கு காலேஜ் போகும்போது குடுத்தியா  நீ? " என்றாள். 

"பாட்டி, குழியப்பம் கூட கெட்சப் இருக்கா ?" என்று கேட்டுக்கொண்டே தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு தாத்தாவுடன் டிவி பார்க்க சென்றுவிட்டாள் ப்ரியா.

"பேப்பர்லே ரெண்டுநாள் முன்னாடி  கூட கண்றாவி  நியூஸ் ,யாரோ ஒருத்தன் 10 வயசு பெண் குழந்தையை  பலாத்காரம் பண்ணிட்டானாம் .என்ன ஜென்மங்களோ...

இதுக்கெல்லாம் பார்த்தா இடுப்பு தெரியற தாவணிக்கு பதில் முழுசா கவர் பண்ற ஜீன்ஸ் டீ ஷர்ட் எவ்வளவோ பெட்டர் " என்று அங்கலாய்த்தாள் பரிமளம்.

" உனக்காக இன்னிக்கு போட்டுக்க சம்மதிச்சா. இல்லேன்னா அவள்  இஷ்டப்படி தான் டிரஸ்.இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட். அடக்கமாகவும் அதே சமயம் சௌகர்யமாகவும் டிரஸ்  பண்ணிக்க தெரியும். ஆனா ஒருத்தர்  போடற ட்ரெஸ்ஸுக்கும், கேடு கெட்ட ராஸ்கல்ஸ் பலாத்காரம் பண்றதுக்கும், சம்பந்தமே  இல்லம்மா .. .. " என்றாள் ரத்னா.

" நீ இப்படி காலத்துக்கு ஏற்ற  மாதிரி கண்ணோட்டத்தை மாத்திக்கறது ரொம்போ பெருமையா  இருக்கு " என்று சொன்ன  ரத்னா திடீரென தன்  தாய்  விசும்புவதை கவனித்தாள்...

பதட்டத்துடன்  "என்னம்மா ? அப்பாவோட சண்டையா ? ஏன் அழறே ?" என்றாள் .

"இல்லை ரத்னா ...இந்த பலாத்கார நியூஸ் என்னை ரொம்பவே  பாதித்துவிட்டது ..வீட்டு  மாப்பிள்ளை என்ற ஹோதாவில் உங்க அத்தை புருஷன் , அதான் அந்த படுபாவி , உன்கிட்ட தப்பா நடந்துண்டதை, நீ ஆறாவது படிக்கும் போது திக்கி திணறி என்கிட்டே சொல்ல வந்த போது நான் அப்பிராணியா இருந்திட்டேனே .. உன்னை காப்பதலே ..ரொம்பவும்  தப்பு பண்ணிட்டேன்... "

அந்த படுபாவி , இப்போ  நல்லவனா நடிக்கறான்  என்றும் ,  நரகம் தான் அவனுக்கு நிச்சயம்  என்றும் அரற்றிக்கொண்டே  அழுதாள் பரிமளம்.

"என்னை மன்னிப்பியா ரத்னா ?" என்று நொந்து போய்க்கேட்ட பரிமளத்தை பார்க்க சங்கடமாய்  இருந்தது ரத்னாவிற்கு. 

" நீ வேணும்னு பண்ணலேம்மா. உனக்கு அப்படி நடக்கும்னு ஒரு கிஞ்சித்தும்  சந்தேகம் வரலே . நீ  என்ன பண்ணுவே"....என்றாள் ரத்னா எங்கேயோ பார்த்துக்கொண்டு ..

"அப்போ நான் கோட்டை விட்டுட்டேன், ரத்னா..ஆனா நேற்று நானும் அப்பாவும் அந்த கேடுகெட்டவன் வீட்டுக்கு போய் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி எல்லாத்தையும் சொல்லி கேட்டுட்டு வந்தோம்" என்று பரிமளம் சொல்லும் போது தான், எங்கோ நிலை குத்தி நின்ற ரத்னாவின்  பார்வை, மீண்டும்  பரிமளம் பக்கம் ஆச்சர்யத்தோடு திரும்பியது.

 அத்தையும் அந்த கேடு கெட்டவனும்  ஆடிப்போய்விட்டனர் என்று கூறிய பரிமளத்தை பார்த்து ,"எப்படிம்மா இவ்வளவு தைரியம்  வந்தது உங்களுக்கு " என்று வியப்பு மாறாமல் கேட்டாள் ரத்னா.

தன்   மகள்  பட்ட கஷ்டத்துக்கு, தானே  ஒரு காரணமாக  ஆகிவிட்டோமோ   என்ற குற்றஉணர்வு தந்த உத்வேகம் தான் அந்த தைரியத்திற்கு காரணம் என்றாள் பரிமளம்.

"அப்புறம்? " என்றாள் ரத்னா தன்  காதையே நம்ப முடியாமல்..

" அப்புறம் என்ன, அந்த சண்டாளனைப்  பத்தி தெரியும் போல இருக்கு அத்தைக்கு ..அவள் மட்டும் விசும்பிக்கொண்டே   இருந்தாள். அவன் கற்பூரம் அடிச்சு சத்தியம்  அப்படி இப்படின்னு பினாத்தினான் ..அதற்கு   அப்பா, எந்த கோவில் ,சாமி முன்னாடி சத்தியம்  போட்டாலும் செல்லாதுடா, மன்னிப்பே கிடையாது உனக்கு என்று சொல்லிவிட்டு அங்கே நிற்கப் பிடிக்காமல், திரும்பி பார்க்காமல் வந்து விட்டோம் " என்று மேலும் கீழும் மூச்சு இறைக்க ஆவேசத்தோடு சொல்லி முடித்தாள்  பரிமளம்.

"வாவ் , ஆசம்  பாட்டி ! நீ எங்க அம்மாவோட ரொம்போ தைரியம்  "  என்று ஓடி வந்து பரிமளத்தை கட்டி கொண்டாள், பாட்டி அழும்  சத்தம் கேட்டு  அமைதியாக இதை எல்லாம்  பின்னாலிருந்து தாத்தாவுடன் கேட்டுக்கொண்டிருந்த ப்ரியா !

சற்றே திகைத்துப்போன  பரிமளம், ப்ரியாவிற்கு இதெல்லாம் தெரியுமா என்று கலக்கத்துடன் கேட்டாள்.

" ஸ்வீட் பாட்டி, எனக்கு நடந்தது எல்லாம் தெரியும். என்னை  இந்த மாதிரி ஆபத்திலிருந்து காப்பாத்திக்கவும் தெரியும். அம்மா சொல்லி குடுத்திருக்கா " என்றாள் பாட்டியை மேலும் இறுக்கிய ப்ரியா.

ரத்னாவிற்கு தன்னை நெருக்கிக் கொண்டிருந்த  ஏதோ  ஒன்று சட்டென அவிழ்ந்தது போலவும் ..முதுகெலும்பு சற்றே நேராய் ஆனதுபோலவும் , தன்னை சுற்றியுள்ள எல்லாமும் எல்லாரும் புதிதாய் தெரிவது போலவும் இருந்தது.

"இது போதும்மா எனக்கு ..மன்னிக்க மாட்டேன். ஆனா இனிமேல் மறப்பது சுலபம் " என்று ரத்னா சொல்லும்போது எல்லோர் கண்ணிலும் கண்ணீர் ..கூடவே உதட்டில் புன்னகையும் ..முகத்தில் தெளிவும் .

"ஒரு கொடும்பாவி, நல்லவனாக எல்லோர் முன்னால்  தெரிவது காலப்பிழையினால்  வந்த காட்சிப்பிழை தான்.

இதில்  உன் பிழை எதுவும் இல்லை" என்று ரத்னாவின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொண்டே சொன்னார் அவள் அப்பா, ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்.

"வாவ் ,தாத்தா !"  எனக்கும் புரியற தமிழிலே சொல்ல முடியுமா ?" என்றாள்  ப்ரியா !!

அது ஓண்ணும் இல்லேம்மா , கொஞ்சம் லேட்டா அக்யூஸ் பண்ணினால் ,அவன் அதுவரைக்கும் நல்லவனா தெரியறது வெறும் மிராஜ் எபக்ட்  தான். காட்சிப்பிழை.

காலப்பிழையினால் வந்த காட்சிப்பிழை.
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தேசிய அளவில் குழந்தைகள் மேலான வன்முறை தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

April every year is observed as  National Child Abuse Prevention month..