Friday, October 7, 2016

நவராத்திரி நெருடல்கள்

ரொம்பவும் தயக்கத்துடன் தான் இதை எழுதுகிறேன். "எல்லாத்துலயும் குறை கண்டு பிடிக்கறதே வேலை இவளுக்கு "  என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது .ஆனால் சொல்லவில்லை என்றால் வெடிப்பது என் மண்டை தானே!

சின்ன வயதிலிருந்தே அம்மாவிடம் தர்க்கம் . " ஏன் நம் வீட்டில் வேலை செய்யும் மங்காவும் , வரதாவும் சுமங்கலிகள் இல்லையா ?" என்று.

அன்றிலிருந்து ஆரம்பித்தது என் அம்மாவிடமிருந்து.. முதலில் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு  தாம்பூலம் கொடுக்கும் பழக்கம்.

சுமங்கலி என்றால் கல்யாணம் ஆகி கணவனுடன் வாழ்பவர்கள் மட்டுமே என்ற அர்த்தம் அந்த சின்ன வயதில் அவ்வளவு உரைக்க வில்லை.

ஜாதி சார்ந்த சுமங்கலி பாகுபாடு மட்டுமே புலப்பட்டது அன்று.

கல்யாணமாகி பண்டிகைகள் , பிரார்த்தனைகள், என்று வரும்போது தான் திரை விலகி எப்படி நம் சமுதாயம்,மிகவும்  நுட்பமாக கணவனை இழந்தவர்களை நாசூக்காக எல்லா மங்கள காரியங்களிலும் நயமாக ஒதுக்கி வைக்கிறது என்பது புரிய தொடங்கியது .

கல்யாணங்களில் பாலிகை  தெளிக்க வேண்டுமா? கூப்பிடு சுமங்கலிகளை. சுமங்கலி பிரார்த்தனையா ? கூப்பிடு சுமங்கலிகளை.

ஹும் ..

சு-மங்கலி என்றால் என்ன? மிக- மங்களகரமான என்று பொருள். எத்தனை அழகான சொற்றொடர் !

இந்த சுமங்கலிகளிடமிருந்து அப்படி என்ன தான்  எதிர்பார்க்கப்படுகிறது கல்யாணங்களிலும் , மூத்தோர்  பிரார்தனைகளிலும்?

ஆசீர்வாதம் , பிரார்த்தனை. அவ்வளவே .

எங்கேயோ பிழை நடந்து கணவனை இழந்தவர்கள் சுமங்கலிகள் அல்ல என்று கருத்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

கணவனை இழந்தவர்கள் ஆசிர்வாதம் கொடுக்கமுடியாதா என்ன? பிரார்த்தனை செய்ய முடியாதா என்ன ?

பிறந்ததுமுதலே பெண்கள் பூவும் பொட்டும் அணிகிறோம் என்றால் கணவனை இழந்தபின் அவற்றை ஏன்  துறக்கவேண்டும் ?

எழுத்தாளர் சிவசங்கரி போன்றோர் இதற்கு விதிவிலக்கு. நல்ல முன்மாதிரியும் கூட.

இந்த பாகுபாடு மனதை மிகவும் நெருடுகிறது. கணவனை இழந்த பெண்களுக்கு இன்னும் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

எங்கள் வீட்டு  கொலுவிற்கு  எப்போதும்  போல்  எங்கள் குடியிருப்பில் உள்ள தோட்ட ம் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களை அழைத்திருந்தோம். அதில் இரண்டு பெண்கள் மிகவும் தயங்கி தயங்கியே வந்தனர்..ஒரு ஓரமாகவே நின்று உட்காரவும் மறுத்தனர். கண்ணாடி வளையல்களை வாங்கி கொள்ள மறுத்தனர்.

" ஏன்  கலர்,டிசைன் பிடிக்கவில்லையா?" என்று கேட்டேன். "ஐயோ அப்படியில்லை அக்கா , நாங்கள் போட்டுக்கொள்ள கூடாது " என்று மிகவும் தயக்கத்துடன் கூறினர் .

கண்ணாடி  வளையல் வேண்டாம் என்று கூறிய பெண்களை வற்புறுத்த ஆசை இருந்தும்..அவள் வாழும் சமுதாயம் அவளை அவதூறாக பேச காரணமாகிவிடக்கூடாது என்று விட்டு விட்டேன்.

நன்கு படித்து வேலைக்கும் செல்லும் ஒரு பெண்மணி எனது கொலு அழைப்பிற்கு தான் இது போன்ற அழைப்புகளை கணவன் இறந்த பின்  ஏற்பதில்லை என்று  வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பினாள். காரணம் கேட்டதற்கு மற்றவர்கள் சகஜமாக ஏற்பதில்லை என்றும் தனிப்படுத்தப்படுவதாகவும் கூறினாள்.

மிகவும் வற்புறுத்திய  பின்னர் யாரும் வராத ஒரு நேரத்தில் வந்து தாம்பூலம் வாங்கிச்சென்றாள்.


ஆனால் இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிந்தது..வெளிப்படையாய் இல்லை என்றாலும் ,மிகவும் நுட்பமானமுறையில் இன்னமும் நாம் கணவன் இழந்த பெண்களை தனிப்படுத்துகிறோம். பாகுபடுத்துகிறோம்.

சில சமயம் அறிந்தும். பல சமயம் அறியாமலும்...

கணவனை இழந்த ஒரு தோழி அவள்வீட்டு கொலுவிற்கு மற்ற பெண்களை கூப்பிடுவாள். ஆனால் மற்றொரு தோழியை  தாம்பூலம் கொடுக்கச் செய்வாள்.

" நீயே உன் கையால் கொடு நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் " என்று அவள் வீட்டுக்கு செல்லும் பெண்கள் வெளிப்படையாய் சொல்ல வேண்டும்.வற்புறுத்த வேண்டும் .

இம்முறை நவராத்திரி பண்டிகையின் போது நடந்த இந்த இரு சம்பவங்கள் மேலும் என்னை சிந்திக்க வைத்தது ... நான் மட்டும் சிந்தித்தால் போதாது.

நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டும் . தீவினை அகன்றிட வேண்டும்.

நமக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்று நினைத்தால் மட்டும் போதாது . செயல் படுத்த வேண்டும். வலிய சென்று முன்னோடியாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் குதர்க்கம், வீண் வாதம், பெரியோர் சொல்வதை எதிர்ப்பது என்பதே வழக்கம் என்று என்னை ஏசினாலும்  பரவாயில்லை.

இருப்பதோ  ஒரு தலை. வெடித்தால்   என்னாவது?  சொல்லாமலிருக்க முடியவில்லை.

பெண்ணாய் பிறக்கும் ஒவ்வொருவரும்  சுமங்கலியே.

Wednesday, October 5, 2016

குறை ஒன்றும் இல்லை


ஒரு கண்ணாடி கை  தடி போதும்  காந்தியை காண 

தொந்தியும்  தும்பிக்கையும் போதும் பிள்ளையாரை பார்க்க 

முண்டாசும் மீசையும் மட்டும் போதும்  மூத்த கவி பாரதிக்கு  

குழலும் மயில் பீலியும் போதும்  மாய கண்ணனுக்கு

குறை ஒன்றும் இல்லை!