Monday, June 27, 2016

பேசி தீர்க்கலாமா ? தீர்த்து விட்டு பேசலாமா?

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து விடலாம் என்ற காலம்  போய் , "ஒரே அடியாய்   தீர்த்து விடலாம் " என்ற நிலைமை  எப்படி வந்தது ?

அநியாயத்தை எதிர்க்கும் சக்தி அற்று தேவை இல்லாத சகிப்புத்தன்மையை வளர்த்து கொண்டோமே அதனாலா ?

பள்ளி,கல்லூரி, அலுவலகம் சென்றால் பத்திரமாக திரும்ப வேண்டுமே என்ற கவலையில்  போருக்கு அனுப்புவது போல் கண்ணில் தூவ காரப்பொடி , மற்றும் சிறிதாய் காயப்படுத்த கத்தி என்று தயார் படுத்தி கொண்டோமே அதனாலா?

பரதம் ,சங்கீதம்   அதனோடு தற்காப்பு கலையும் வளர்த்தோமே பெண்களுக்கு அதனாலா ?

ஆபத்து வந்தால் எப்படி காப்பாற்றலாம் என்று ஆழ்ந்து யோசித்து,ஆபத்து வராமல் தடுப்பது எப்படி என்பதை சிந்திக்க மறந்தோமே அதனாலா?

எதில் நம்மை தொலைத்தோம்?

பாழடைந்த பங்களாவிலும் , ஆள் அரவமற்ற காடுகளிலும் , கும்மிருட்டும் ,பதுங்க இடமும் இருந்தால்  மாத்திரமே கொலை நடந்தது என்று நினைத்திருந்தோம் .

கொலை செய்பவன் யாரும் பார்க்க கூடாது என்று நினைத்தான். பார்ப்பவர்கள் சும்மாவா விடுவார்கள்? மிதித்து  விட மாட்டார்களா?

அதெல்லாம் அன்று.

செத்த பாம்பாய்,வாய் மூடி நின்று வேடிக்கை பார்த்தோம் பார்வையாளராய், இன்று.

காலப்போக்கில் எல்லாம் மாறியது போல் , மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று தேற்றிக்கொண்டு , பட்டப்பகலில், வெட்ட வெளியில் , மக்கள் மத்தியில், தனியாய் வந்து வெட்டி வீழ்த்தி , நிதானமாய் நடந்து போகும் தைரியம் யார் கொடுத்தது? எங்கிருந்து வந்தது?

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன மஹாகவி பிறந்த மண்ணில் கூட்டத்தில் தனியாய், குருதியில், கேட்பாரற்று உயிர் நீத்த போது எல்லோரும் எங்கே இருந்தார்கள்?

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்றும்,நன்றி வேண்டாம் -நான் செய்த உதவியை  நீ நாலு பேருக்கு செய்து சங்கிலி தொடரை வளர்த்துவிடு என்றெல்லாம் வளர்ந்த சமூகம் எப்படி இப்படி மாறியது?

நமக்கேன் வீண் வம்பு என்று நயமாய் எப்போது நகர கற்று கொண்டது இச்சமூகம் ?

ஊரளவில் பஞ்சாயத்து , நாடளவில் பாராளுமன்றம் , உலகளவில் ஐக்கிய நாடுகள் சபை என்று  பேச்சுவார்தைக்கும்,சச்சரவு தீர்வுக்கும் வழி வகுத்தோம்.

வீட்டளவில்  என்ன செய்தோம் ? பேச்சு வார்த்தைக்கு இடமின்றி தற்கொலை ,கொலை என்ற தீர்மானத்திற்கு ஏன்  வந்தனர் நம் இளைஞர்கள் ?

கணக்கு பரிட்சையில் தோல்வியா ? எடு கயிற்றை , தொங்கு மின் விசிறியில்.

காதல் தோல்வியா ? கத்தி , வெட்டு , குத்து .

ஆள் வைத்து கொலை செய்த காலம் போய் தன் கையே தனக்குதவி என்ற அவல  நிலை.

நம் அக்கறை இன்மையும் , பிறருக்கு நடந்த அசம்பாவிதம் நம்மை அண்டாது என்ற அசட்டு நம்பிக்கையும் தான் காரணம்.

முற்றிலும் நாமே காரணம்.

ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்போம் ...

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து விடலாம், என்பதே முதல் பாடமாய் இருக்கட்டும் நம் குழந்தைகளுக்கு.Deeply disturbed by the murder of a young IT professional at the Nugambakkam Railway station a couple of days back.Teaching self-defense to our daughters is like accepting and treating the ailment symptomatically.The cure, however, lies in educating our youth on anger management, conflict resolution and establishing trust and belief in dialogues.

That must be the motto of every new age parent, in my opinion.
#swathy murder
2 comments:

Rajagopal Suresh said...

தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்கள் அனுதாபங்களிலும், ஆதங்கத்திலும் நான் பங்கு கொள்கிறேன். இருப்பினும், இவ்வளவு அனுதாபங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் விரைவில் அடங்கி விடும். பொது மக்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப் பட்டவரின் குடும்பத்தினரும் பெருமளவில் ஒரு சகஜ நிலைக்கு வந்து விடுவார்கள். இது உலக நியதி.

ஆனால் அதையும் மீறிய அவசியம் ஒன்று இருக்கிறது. கற்றுக்கொள்ளல். இவற்றை போன்ற நிகழ்ச்சிக்கும் பிறகும் கற்றுக்கொள்ளுதல் நிகழ்வதில்லை என்பது ஒரு பெரும் இழிவான உண்மை. கற்றுக்கொள்ளுதல் ஒரு இயக்கமாக்கப் பட வேண்டும். சமூக ஆர்வலர்கள் விவாத மேடைகள் அமைக்க வேண்டும். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், தேர்ந்த மனோவியல் நிபுணர்கள் மூலமாகவும், ட்ரெயினர்கள் மூலமாகவும், இலவசமாக வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். குடும்ப அளவிலும், சமூக அளவிலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட வேண்டும். எந்த ஒரு முற்செயலுக்கும் என்னுடைய் நேரத்தையும், திறமையையும் ஒதுக்க நான் தயாராயிருக்கிறேன். நல்லுறவுகளை இணைப்போம். புதிய சமுதாயம் படைப்போம்.

Viji Ganesh said...

Blog post படித்து, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி .
ஆம், இதெல்லாம் வெறும் புகையாய் போய் விடாமல் இருக்கவும் அடித்தள மாற்றம் கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.