Friday, July 10, 2015

பாட்டியின் கை மணம்கடலை மாவு கறி ..


எங்கள் பாட்டி நாக்பூரில் சில வருடங்கள் இருந்த போது தெரிந்து கொண்ட ரெசிபி இந்த கடலை மாவு கறி.

ஆர்பாட்டம், அமளி இல்லாது  மிகவும்  சுலபமாக செய்யகூடியது . ருசியிலோ அலாதியானது .என்னை போல், சமையல் செய்வதிலிருந்து  எப்படி, எப்போது  தப்பிக்கலாம் என்ற யோசனையிலேயே ( அதுவும் பசியோடு !) காலம் கடத்துவோருக்கு ஏற்ற கச்சிதமான ரெசிபி.

பாட்டியின் கை மணம் அப்படியே வரவேண்டும் என்றால் சுமார் அரை லிட்டர் ரீபைண்டு  எண்ணை தேவை படும். அந்த தைரியம் இருந்தால் மேலே படிக்கவும்!

-- கடலை மாவு ஒரு பெரிய கப் அளவு 
-- மிகவும் பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 5 அல்லது 6
-- 7-8  பச்சை மிளகாய் - ருசியும் காரமும் கை கோர்த்து விளையாடும் போது கண்ணில்         கண்ணீரும் கையில் தண்ணீரும் தவிர்க்க முடியாது .
-- தேவைக்கு சற்றே அதிகமான அளவு எண்ணை ( மாதம் முதல் தேதிகளில் மட்டுமே இதை பாட்டி பண்ணும் ரகசியம் இப்போதுதான் புரிகிறது)
-- தேவைக்கு ஏற்ற உப்பு 
-- தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு , கவலையே படாமல் எல்லோரும் தூக்கி ஏறிய போகும் கருவேப்பிலை கொஞ்சம் .
அடுப்பில் இலுப்பை சட்டி( நான்-ஸ்டிக் கடாய் எல்லாம் இந்த கறிக்கு உதவாது ) காயும்  போது  அதிகப்படி எண்ணையில் பாதியை விட்டு கடுகு ,உளுந்து , 'அந்த" கருவேப்பிலை போட்டு சட சடவென  தாளிக்கும் ஓசையிலும் ,வாசத்திலும் மைய் மறந்து போய் கருகவிடாமல் ,பச்சை மிளகாய் ,பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தேவைக்கேற்ற உப்பையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம்  இளஞ்சிவப்பு நிறமாக மாறும். கம கம வாசனையில் பசி மிஞ்சி போகும்.அப்போது சட்டென்று மொத்த கடலை மாவையும் பரவலாக தூவி கிளறவும் . இப்போதுதான் உள்ளே நுழைந்த கடலை மாவை வரவேற்க இன்னும் கொஞ்சம் எண்ணை விடவும்.

மறுபடியும் எண்ணை விடவும்.விட்டுக்கொண்டே இருக்கவும்.

கை வலிக்கும் வரை கிளறிக்கொண்டே இருந்தோமேயானால் நமக்கு வாழ்க்கை பட்டவர் கண்டிப்பாக கடலை மாவு கறி வாசம் ஈர்க்க சமையல் அறை பக்கம் வரலாம்.மெட்ராஸ் மழை போல் வராமலும் போகலாம் .ஒரு ஓலம் அல்லது கூக்குரல் போட்டால் குடும்பமே வந்து விடும் .அப்புறம் என்ன ? கரண்டி கைமாற நன்றாக கிளற பயிற்சி கொடுத்தால் , மழைக்காலத்தில் மைசூர் பாக் கிளற உதவும்!

மணல் மணலாய் வரும் வரை கிளற சொல்லி பெரிய நன்றியும் சுட சுட நாலு பூரியும் தட்டில் வைத்து கொடுத்து பரிமாறவும்.
அவ்வளவேதான் பாட்டி பண்ணும் கடலை மாவு கறி. 

வேண்டுமென்றால் சிறிது ஓமம் சேர்க்கலாம். குடைமிளகாயும் சேர்க்கலாம். ஆனால் அதெல்லாம் ப்ஹு ஷன்  மியூசிக் மாதிரி.

ஒரிஜினல் ரொம்போ சிம்பிள் . ரயில் பயணங்களுக்கு சப்பாத்தியுடன் மிகவும் ideal என்று பாட் டி சொன்ன ஞாபகம் ....

மேலும் மேலும் பழைய ஞாபகங்கள் ...கடலை மாவு கறியுடன் அசை போட .........
2 comments:

Uma Srinivasan said...

viji, to make it easier, I think we can karachify the kadalai maavu in water and keep kelarufying till it becomes manal manalla, like we do for pulima upma.

Viji Ganesh said...

Thankyou Uma athai ..will try that when I indulge in this yearly affair next year !